Saturday, November 21, 2009

ரசித்த கவிதை: என் கடவுள் இறந்துபோயிருந்தார்...

Thursday November 19, 2009

தேவதைகள் தந்ததொரு பூங்கொத்து

ஹெச்.ஜி.ரசூல்


எனது கனவின் பாதையில் வந்து நிற்கும்

தேவதைகள் எல்லோரும்

சந்தோஷமிக்கவர்களாகவே இருக்கிறார்கள்

துயரம் கண்ணீர் என்பவற்றின் அர்த்தம்

தேவதைகளின் அகராதியில் இல்லை போலும்.

என்னிடம் கைகுலுக்கிக் கொண்டு

ஒரு பூங்கொத்தை தந்த மாத்திரத்தில்

கள்ளங்கபடமற்று

ஒரு குழந்தையாய் விளையாடத்துவங்குகிறேன்

நான் வாசிக்கும் வரிகளில்

மேலும் கீழும் மிதந்து

ஆழ்மனக்கனவின் நதியில்

ஒரு மீன்குஞ்சு வந்து போகிறது.

என் அப்பாவின் வியர்வைத்துளிகளைத்தான்

நான் குடித்து முடித்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் அம்மாவின்மடியில்

தலைசாய்த்து படுத்துறங்க முடியவில்லை

இரவிலும் விழித்து

பகலிலும்விழித்து

எதையெதையோ சொல்லி அரற்றிக் கொண்டிருக்கும்

அவளைத் தேற்றுவதற்கு

எந்த சொல்லும் இல்லை

எதிரே பறக்கும் பஞ்சவர்ணகொடிக்கு

மரியாதைசெலுத்திவிட்டு புறப்படும்போது

எங்கோ ஓரிடத்தில் குண்டு வெடிக்கிறது

சின்னாபின்னமான என் கனவுகளை

மீண்டும் ஒவ்வொன்றாக பொறுக்கிக் கொள்கிறேன்.

வழி நெடுக கேட்கும்

ஓலங்கள் இல்லாததொரு உலகிற்கு

பூங்கொத்தோடு வந்த தேவதைகள்

என்னை அழைத்துச் சென்றார்கள்

என் கடவுள் இறந்துபோயிருந்தார்.


http://www.thinnai.com/?module=displaystory&story_id=30911192&format=html

Copyright:thinnai.com 

Stumble Upon Toolbar

Wednesday, November 18, 2009

ரசித்த கவிதை: எனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்

எனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்

ஹெச்.ஜி.ரசூல்


மிரண்டுபோன தேர்ப்பாகனின்

சாட்டைக் குச்சிகளிலும்

பயம் தொற்றிக் கொண்டது.

எனதுலகம் அரைவட்டமாய்ச் சுழல

வானத்தின் துண்டொன்று

பொடிந்து விழுந்தது

பிளிறிய யானையின் தும்பிக்கையில்

நானிருந்தேன்

அது என்னை

ஒரு தேங்காயாய் உடைத்துப் போட்டது.

சிதறிக்கிடக்கும் என்னை

பொறுக்கித் தின்ன நாக்குகள் நீண்டன.

ரத்தம் உறைய அடித்த காற்று

என் சிதிலங்களை தூக்கிச் சென்றது.

நான் காணாமல் போனது மீறி

கணங்களின் மரணத்தில்

ஒவ்வொரு துகள்களிலும்

என்னுருவம் புடைத்துப்பருத்து

பலப்பல யானைகளாய் பிளிறின.

எனக்கு முளைத்த தும்பிக்கைகளால்

எனக்காக நீ கட்டுவதாய் சொன்ன

சொர்க்கத்தை

பலங் கொண்டமட்டும்

இடித்து தகர்க்கிறேன்

Stumble Upon Toolbar

Friday, November 13, 2009

படித்ததில் பிடித்தது - சாருவின் ஸ்டான்லி அனுபவம்

.....கலந்துரையாடல் தொடங்கியது. ஒரு மாணவர் கேட்டார்; ஆணும் பெண்ணும் நட்பாகப் பழகலாமா? விஜய் டீவி கோபிநாத்திடம் கேட்க வேண்டிய கேள்வி. பரவாயில்லை. கேட்டு விட்டார். கலந்துரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஒரு மணி நேரம் என்பதால் எல்லோருக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்று எண்ணி ஓரிரு நிமிடங்களில் சுருக்கமாக பதில் சொன்னேன். உடனே என் பக்கத்தில் அமர்ந்திருந்த பேராசிரியப் பெண்மணி – மருத்துவத் துறையில் நிரம்ப அனுபவம் உள்ளவர், ஆயிரக் கணக்கான டாக்டர்களை உருவாக்கியவர் - என்னிடமிருந்து மைக்கை வாங்கி அந்த மாணவருக்கு 20 நிமிடம் பதில் சொன்னார். தயவுசெய்து நம்புங்கள். 20 நிமிடம் பேசினார். அதுவும் எப்படி? தன் குடும்பக் கதை; மாமியார் கதை; தன்னுடைய மாணவப் பருவம், இத்யாதி, இத்யாதி. எனக்கு ஒரு மெகா சீரியலை பார்ப்பது போல் இருந்தது. கொஞ்ச நேரத்திலேயே மாணவர்கள் கைதட்டி, விசில் அடித்து ரகளை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ம்ஹும். அந்த பேராசிரியை அம்மா கடைசி வரை அசரவே இல்லை. 20 நிமிடம் பேசி முடித்து விட்டுத்தான் ஓய்ந்தார்.

அதற்கப்புறம் நடந்த கூத்து அதை விட கொடுமை. அந்த அம்மாவிடமிருந்து மைக்கை வாங்கிய மற்றொரு பேராசிரியர் – இவரும் ஆயிரக் கணக்கான டாக்டர்களை உருவாக்கிய ஒரு சீனியர் பேராசிரியர் – ஒரு பத்து நிமிடம் தன்னுடைய கதையை அளந்தார். மாணவர்களின் விசில் சத்தம் ரகளை சத்தம் பற்றி அந்தப் பேராசிரியர் இருவரும் துளிக்கூட கவலைப் படவில்லை. அப்படி ஒரு ரகளை நடந்து கொண்டிருக்கிறது என்பது கூட அவர்கள் கவனத்தில் இல்லை.

இவ்வளவுக்கும் அன்றைய நிகழ்ச்சியின் பிரதம விருந்தாளியாக அழைக்கப் பட்டிருந்தவன் அடியேன். பிறகு ஒருவழியாக மைக் என்னிடம் தரப்பட்டது. நான் “இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏதோ கௌன்ஸலிங் நிகழ்ச்சியைப் போல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே எல்லோரும் சுருக்கமாகப் பேசுங்கள் ” என்றேன்.

பிறகு ஒரு மாணவி “நான் பள்ளிப்படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றவள். எனக்கு அஸ்ட்ரோ ஃபிஸிக்ஸ் படிப்பதில் ஆர்வம் இருந்தது. ஆனால் என் பெற்றோர் என்னை வலுக்கட்டாயமாக மருத்துவத்தில் சேர்த்து விட்டார்கள். நான் இப்போது மூன்றாம் ஆண்டு வரை வந்தும் எனக்கு இதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறது; எனக்கு உங்கள் அறிவுரை என்ன? ” என்று கேட்டார்.

அந்தக் கேள்வியின் நேரடித்தன்மை என்னை அசரச் செய்தது. அத்தனை மாணவர்கள், பேராசிரியர்கள் முன்னிலையில் அவர் அப்படிக் கேட்டது மிகப் பெரிய விஷயம். இதற்கும் நான் சுருக்கமாக, ஆனால் அழுத்தமாக இரண்டு நிமிடம் பதில் சொன்னேன்.

படிப்பு என்பது இந்த ஐந்து ஆண்டுகளோடு முடிந்து விட்டதாக ஏன் நினைக்கிறீர்கள்? ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த என்னை என் வீட்டு முதியவர்கள் பௌதிகத்தில் சேர்த்தார்கள். ஆனால் நான் இன்று ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், அரபி இலக்கியங்கள் மற்றும் சமூகவியல், தத்துவம் ஆகிய துறைகளில் ஒரு பேராசிரியராக அமரும் அளவுக்குப் படித்து விட்டேன்; படித்துக் கொண்டிருக்கிறேன்.. மருத்துவத்தை முடித்து விட்டு அஸ்ட்ரோ ஃபிஸிக்ஸ் படியுங்கள். எத்தனையோ பேர் மருத்துவம் படித்து விட்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கலெக்டராக இருக்கிறார்கள். படிப்புக்கு வயது வரம்போ எல்லையோ கிடையாது. உங்களுடைய ஆயுட்காலமும் தொடர வேண்டியது படிப்பு. அதில் இந்த மருத்துவப் படிப்பை ஒரு கூடுதல் தகுதியாகக் கொள்ளுங்கள்.

நான் இரண்டு நிமிடம் பேசி முடித்ததும் என் கையிலிருந்து மைக்கை வாங்கினார் அந்த முதிய பேராசிரியை. அந்த மாணவியின் மீது கொலைவெறியோடு பாய்ந்தார். (அதாவது, எனக்கு அப்படித் தோன்றியது). சுத்தமாக இருபது நிமிடம். ஆடு மாடுகளை அறுப்பது போல் அந்த மாணவியை துவம்சம் செய்தார் பேராசிரியை. ஒரு பெரிய ஸ்லாட்டர் ஹௌவுஸை நேரடியாகப் பார்ப்பது போல் இருந்தது. பாவம், அந்த மாணவி அழுது விடும் நிலைக்கு வந்து விட்டார். பேராசிரியைக்கு அந்த மாணவி தன்னையும், தன் கல்லூரியையும் நேரடியாக அவமதித்து விட்டது போல் தோன்றி விட்டது என்று நினைக்கிறேன். அடி வெளுத்து வாங்கினார். மாணவர்களும் சளைக்கவில்லை. விசில், கைதட்டல் என்று பலவிதமாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். எனக்கு ஏதோ ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஒண்டி ஆளாக மாட்டிக் கொண்டு விட்டது போல் தோன்றியது. சில மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளை ஏதோ விரோதிகள் மாதிரி நினைத்து நடந்து கொள்வதன் மர்மம் எனக்கு அன்றுதான் விளங்கியது.

20 நிமிட ரகளை ஓய்ந்தபின் அமைதி திரும்பியது என்று நினைக்கிறீர்களா? ம்ஹும். உங்களுக்குத் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தம். அந்த முதிய பேராசிரியை தன் 20 நிமிட கசாப்பு வேலையை முடித்ததும் அந்த மற்றொரு பேராசிரியர் அவரிடமிருந்து மைக்கை வாங்கி தன் பங்குக்கு 10 நிமிடம் கத்தி போட்டார்.

அதற்குள் ஒரு மணி நேரம் முடிந்து விட்டது. கிளம்பி வந்து விட்டேன்.

நண்பர்களே... இப்படி ஒரு சமூகத்தில் நீங்களெல்லாம் எப்படி மனநோயாளியாக மாறி விடாமல் உங்கள் மனோநிலையையும், லயத்தையும் தக்க வைத்துக் கொள்கிறீர்கள் என்ற ரகசியத்தை எனக்குக் கொஞ்சம் கற்றுத் தாருங்கள், ப்ளீஸ்.

என் கட்டுரைகளில் அடிக்கடி தமிழர்களைப் பற்றி philistines என்று குறிப்பிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். விவிலியத்தில் இந்த வார்த்தை ‘பிலிஸ்தீனியர்கள் ’ என்று வருவதாக தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டார். இப்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம் அதுதான். தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு சுரணையுணர்வு இல்லை. அதாவது, சபை நாகரீகம், அடுத்தவரோடு எப்படிப் பேசுவது, பொது இடத்தில் எப்படித் தும்முவது, அடுத்த மனிதரை எப்படி இம்சிக்காமல் இருப்பது, ஒரே வார்த்தையில் சொன்னால், இந்த உலகத்தில் வாழ நம்மைப் போலவே அடுத்த மனிதருக்கும் உரிமை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அதற்குத் தக்க வாழ்தல் என்பதுதான் சுரணை உணர்வு. இந்த சுரணை உணர்வு இலக்கிய வாசிப்பினால் மட்டுமே வரக் கூடியது. மற்றபடி கடவுளாகவே இருந்தாலும் இது விஷயத்தில் உங்களுக்கு உதவி செய்ய முடியாது.

புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்க ஆட்களைத் தேட வேண்டியிருப்பதன் காரணமும் இதுதான். ஒரே வார்த்தையில் சொன்னால், தமிழ்நாட்டில் கலை இலக்கியச் செயல்பாடுகள் ஒட்டு மொத்தமாக நின்று போய் விட்டன என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. கல்விக்கூடங்களில் பெரிய பட்டம் வாங்கியவர்கள் பெரும்பாலும் ஒரு துறை சார்ந்த அளவில் அறிவை சேகரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மற்ற எந்த விஷயத்திலும் ஒரு அடிப்படைப் புரிதல் கூட இல்லை. இதைத்தான் திரும்பத் திரும்ப என் கட்டுரைகளில் வலியுறுத்தி வருகிறேன்.

ஓரிரு தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் சிலேயிலிருந்து பேசினார். லத்தீன் அமெரிக்காவின் மேல் சொல்லமுடியாத ஈர்ப்பு கொண்டவர். அதற்கு என் எழுத்துக்களும் ஒரு காரணம் என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். “இப்போது பாப்லோ நெரூதாவின் வீட்டில் நின்று கொண்டிருக்கிறேன்; உங்கள் ஞாபகம் வந்தது. அழைத்தேன் ” என்றார். ஓரிரு நாளில் பொலிவியாவுக்கும், பிறகு பெரூவுக்கும் செல்வதாகச் சொன்னார்.

இதுவே ஒரு சீலேக்காரர் தமிழ்நாடு வந்தால் அவர் போகக் கூடிய இடம் எதுவாக இருக்கும், சொல்லுங்கள். அண்ணா சமாதி, எம்ஜியார் சமாதி... இங்கே யாருக்காவது பாரதியின் சமாதி எங்கே இருக்கிறது என்று தெரியுமா? தமிழ்நாடே ஒரு கலாச்சார சமாதிதானே, இங்கே போய் எப்படி பாரதியின் சமாதியைத் தேடுவது?

http://www.charuonline.com/Nov2009/alaikiren.html

Stumble Upon Toolbar

Saturday, September 12, 2009

ஈழத்தின் கோரம்

தமிழ்ஹிந்து தளத்தில் எழுதிய பின்னூட்டம்:


//கட்டுரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு வார்த்தையில் ஈழ இந்துக்களை குறிப்பிட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறது. நமது கண் முன்னால், நம் தலைமுறையில் இந்துக்கள் சந்தித்த பேரழிவு இன்று இலங்கையில்/ஈழத்தில் நிகழ்ந்திருப்பது.

புலிகளுக்கு நாம் யாரும் ஆதரவாளர் கிடையாது. ஆனால், அதை சாக்காக வைத்து இன்று இந்த அளவுக்கு ஒரு பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி, குறைந்தது ஆயிரம்-ஆயிரத்தைந்நூறு ஆண்டுகாலம் வாழ்ந்த ஒரு இனத்தை அவர்களின் பூர்வீக நிலத்திலேயே அகதிகளாக்கி ஒரு பெரும் ஹிந்து ஹோலோகாஸ்டை நிகழ்த்தியிருக்கிறது சிங்கள-பவுத்த பேரினவாத அரசு. அந்த இந்துக்களின் அழிவை, தொடர்ந்து இந்துக்கள் அழிக்கப்பட்டு இன்று இலங்கையில் முஸ்லீம்களை விட சிறுபான்மையினமாக இந்த முப்பதாண்டுகளில் மாற்றப்பட்டுவிட்ட கோரத்தை - ஆப்ரிக்காவில் நிகழ்ந்தது, அன்று யூதர்களுக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்தது என்று படித்து மட்டுமே அறிந்திருந்த ஒரு பேரழிவை தமிழ் இந்துக்களின் மீது நிகழ்த்திவிட்டு அந்த குருதி காயும் முன், குழந்தைகள் - சிறுவர்கள் - வயோதிகர்கள் என தமிழ் மக்கள் இன்னமும் பிணைக்கைதிகளாக வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அரச மரக்கிளையுடன் திருமதி ராஜபக்ஷே யாழ்ப்பாணம் செல்வதும், பிரபாகரனை வெற்றி கொண்ட ராஜபக்சேவை துத்தகாமனுவுடன் ஒப்பிடுவதும், யக்கர்கள் ஒழிந்தார்கள் என்று பெருமிதம் கொள்வதும், ஜஸ்டிஸ் அமைச்சகத்திற்கு ஆலோசகர்களாக தேரர்கள் நியமிக்கப்பட்டு பவுத்த ஷரியாவை கொண்டு வந்து கொஞ்ச நஞ்ச இந்துக்களையும் முழுக்க முழுக்க அவர்களின் சொந்த நிலத்தில் திம்மிக்களாக மாற்றும் இந்த கொடூரத்தையும், குரூரத்தையும் ஒரு வார்த்தையை மட்டும் குறிப்பிட்டு சொல்லியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மற்றபடி நல்ல கட்டுரை. மொழிபெயர்த்து வெளியிட்டதற்கு நன்றி ஜடாயு.//



-------

ஸ்ரீகிருஷ்ணா,


தனி மனித முத்திரை குத்தல்களில் ஈடுபடாமல், பதில் சொல்ல முடியுமென்றால், கொஞ்சம் எனது இந்த பதில்களை படித்து, சிந்தித்துவிட்டு ஒரு நாள் இடைவெளி விட்டு பின்பு பதில் சொல்லுங்கள். தயவு செய்து *உங்களைப் போன்ற புலி ஆதரவாளர்கள்' போன்ற முத்திரை குத்தல்களை தவிர்க்கவும். நாம் சந்திப்பது இணையத்தில். அதில், நான் புலி ஆதரவாளன் இல்லை என்று சொல்லியே எனது கருத்தை எழுதியபின்பு இப்படி முத்திரை குத்திவிட்டால் பின்பு பேசுவதற்கு என்ன இருக்கிறது? யார் புலி ஆதரவாளர் என்பது நமது எழுத்துக்களை வைத்து மட்டுமே முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதில் நீங்கள் என் மீது இப்படியான அபாண்ட முத்திரையை குத்தினால், நான் கூட நீங்கள் தான் உண்மையான புலி ஆதரவாளர், வேண்டுமென்றே புலி எதிர்ப்பாளர் போன்று எழுதி ஆனால், புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அல்லது இது 'பொட்டு அம்மான்' என்று எதையாவது எவ்வித ஆதாரமுமில்லாமல் முத்திரை குத்தி நகர்ந்துவிட முடியும். எனவே, இப்படியான முத்திரை குத்தல்கள் நம்மை எங்கும் இட்டுச் செல்லாது. சற்றே நிதானமாக எழுதுங்கள், பதில் சொல்லுங்கள்.

----


// நான் தெரியாமல் தான் கேட்கிறேன்… இலங்கையில் புலிகளுக்கு மாற்றாக ‘இந்து’ என்ற உணர்வுடன் செயல்பட முயற்சித்த ஈழ விடுதலை /ஈழ அரசியல் இயக்கம் ஏதாவது ஒன்றை சொல்லுங்களேன் பார்ப்போம்… நான் இது வரை கேள்விப்படவில்லை. இலங்கைத் தமிழர்களே புலிகள் ஒடுக்கப்பட்ட பின்னும், இந்துக்களாகிய நாங்கள் அவதிப படுகிறோம் என்று எங்கும் சொன்னதாக தெரியவில்லை. இதில் எங்கே இந்துத்துவம் வருகிறது என்று தெரியவில்லை.//

'இந்து' என்ற உணர்வுடன் இருந்தால் தான் அவர்கள் இந்துவா? அப்படியென்றால், உங்கள் (நமது) முன்னோர்கள் அப்படி இந்து என்று கருதி, இந்து உணர்வுடன் இருந்தார்களா? அப்படி இல்லாது போனவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்லவா? எனக்குத் தெரிந்து ஒரு தலைமுறை, இரு தலைமுறைக்கு முன்பாக இந்து என்ற உணர்வுடன் யாரும் இருந்ததில்லை. தங்களை பிள்ளைமார், பிராம்மணர், சைவர், வைணவர் என்று எதாவது ஒரு செக்டோரியன் அடையாளத்துடனேயே கண்டார்கள்.

ஈழத்தமிழர்கள் சரித்திரப் பிண்ணனியின் காரணமாகவும், சில திசை திருப்பல்கள் காரணமாகவும் இன்று தம்மை சைவர்களாக கருதுகிறார்கள். ஆறுமுக நாவலர் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் இந்து இல்லையா? அல்லது அப்படி தன்னை சொன்னால் தான் இந்து என்று கருதுவீர்களா? அப்படியென்றால், அதன் நீட்சியாக இராமனுஜரையும், கண்ணப்பரையும், இன்னும் எண்ணற்ற ஆழ்வார்களையும், நாயன்மார்களையும், உங்களது முன்னோர்களையும் இந்து இல்லை என்பீர்களா? மேலும்,அப்படி இந்து என்ற உணர்வுடன், இந்துத்துவ ஆதரவாளராக இருந்தால் தான் ஒருவர் இந்து என்று கருதுவது பேதமை மட்டுமல்ல, வக்கிர எண்ணம்.


//உங்களைப் போன்ற புலி அபிமானிகள், கிறிஸ்தவம் கைவிட்டபின் இந்துத்துவத்தால் ஏதும் பலிக்குமா என்று பார்க்கிறீர்களா?//


இந்த புலி அபிமானி முத்திரை குத்தலுக்கு நான் மேலே பதில் சொல்லிவிட்டேன். கிறித்துவம் கைவிட்டபின் என்று எதை சொல்கிறீர்கள்? பசியால் வாடுகிறான் ஒருவன், அவனுக்கு ஒருவர் சாப்பாடு போடுகிறார். அவர் என்ன சாதி, என்ன மதம் என்று பார்த்து சாப்பிடுவானா? அதே நிலையில் தான் ஈழத்தமிழர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.


// War is ugly. Civil War is no exception. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே மரணம். //


யார் கத்தியெடுத்தது? தொடர்ந்து இனக்கலவரங்கள், அரசாங்க ரீதியான பாரபட்சங்கள், வன்கொடுமைகள், வலுக்கட்டாய குடியேற்றங்கள் என்று தொடர்ந்து கத்தியெடுத்தது சிங்கள-பவுத்த பேரினவாத அரசுதான். ஒரு கட்டத்தில் அதற்கான எதிர்வினையாக குழுக்கள் கிளம்பின. அவற்றுள் ஒன்று மற்றதையெல்லாம் சாப்பிட்டு பெரிய தீவிரவாத குழுவாக உருப்பெற்றது. இந்த கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம் என்ற லாஜிக்கை, நீங்கள் பின்னே சொல்லியிருக்கும் நாலு பிரதமர்கள் மரணம் என்ற விஷயத்துக்குக் கூட பயன்படுத்தலாம்தானே? சிங்களவர்கள் வினை விதைத்தார்கள், தீவிரவாதத்தை அறுவடை செய்தார்கள். இப்போது விதைத்திருப்பதற்கு எதிர்காலத்தில் அறுவடை செய்வார்கள் என்று கூட சொல்லலாம் தான். நாம் சுவற்றிற்கு எந்தப்புறம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நமது தர்க்கத்தை வளைத்துக்கொள்ளலாம்.



// புலிகள் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். இந்த கொடூரத்திற்கு ஒரு தலைப் பட்சமாக இலங்கை அரசை மட்டும் குறை சொல்வது சரி அல்ல. இலங்கை அரசு, இத்தனை நாள் தாமதித்ததே பெரிது. இப்போது அவர்கள் “enough is enough” என்று இறங்கி விட்டார்கள். //

ஒரு அரசு, இப்படி நீங்கள் சொல்வது போல 'enough is enough' என்று இறங்கினால் என்ன ஆகும் என்று உங்களை அந்த நிலையில் வைத்து கற்பனை செய்து பாருங்கள். 9/11 நிகழ்ந்தபின்பு முஸ்லீம்கள் மட்டுமல்ல, பிரவுன் நிறத்தவர்கள் பலரும் சங்கடங்களை அமெரிக்காவில் சந்தித்தார்கள். உடனடியாக அமெரிக்க அரசு உங்கள் பகுதிகளின் குண்டு வீசி எல்லோரையும் சகட்டு மேனிக்கு கொன்றிருந்தால் அது 'enough is enough' என்பதன் வெளிப்பாடு என்று எடுத்துக்கொள்வீர்களா? அல்லது எல்லா பிரவுன் நிறத்தவரையும் விலங்குகளைப் போல திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்து சோதனை செய்கிறோம் என்ற பெயரில் தினம் தினம் பிடித்துச் சென்று சித்தரவதை செய்து கொன்று போட்டால் - உங்களது மனைவி, மகன் அல்லது மகள் இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தால், அதை இப்படித்தான் நியாயப்படுத்துவீர்களா? நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். நக்சலைட் பிரச்சினை இருக்கிறது. அரசு அதற்காக விமானத்திலிருந்து குண்டுவீசி தண்டகாரன்யக்காடுகளில் இருக்கும் குடிகளை ஆயிரக்கணக்கில் கொன்று போட்டால், அதை சரி என்பீர்களா அல்லது தெலுங்கானா முழுவதையும் திறந்தவெளிச்சிறைசாலையாக மாற்றினால் சரி என்பீர்களா?

// They have won. they are celebrating in their own way. இதே புலிகள் செயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? புறநானூற்று வீரம் என்று குதித்திருக்க மாட்டார்களா… //

அப்படியென்றால் நீங்கள் புலிகளையும், ஒரு அரசையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. இதில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒசாமா பின் லாடனையும் அமெரிக்க அரசையும் அல்லது நக்சலைட்டுகளையும் இந்திய அரசையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரி என்று நம்புவீர்களேயானால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட பார்வை நல்லவேளை உலகில் எங்கும் இல்லை என்பதோடு சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். முன்பு ஒரு முறை எனது பதிவில், குஜராத்தில் இஸ்லாமிய தாதா/தீவிரவாதி ஒருவனின் மனைவியை போலீசார் கற்பழித்து கொன்றதைப் பற்றி வருந்தி எழுதியிருந்தேன்.

இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கெதிராக தொடர்ந்து எழுதிவந்தும், இன்றும் என்னால் சாமான்ய முஸ்லீம் மக்களை துன்புறுத்துவதும், கொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது. அப்படிச் செய்யவில்லை என் அரசு, என் சமூகம் என்பதில் எனக்கு பெருமிதம் இருக்கிறது. சீக்கிய இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை எனது அரசும், நீதி அமைப்பும் (நாள்பட்டாவது) தண்டிக்கிறது, சோபியானில் இரு காஷ்மீர முஸ்லீம் பெண்கள் கற்பழிக்கப்பட்டால் உரியவர்கள் தண்டிக்கப்படுவதற்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது, அல்லது பொது சமூகம் அப்படியான நிர்ப்பந்தத்தை கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட ஒரு அரசையும், சமூகத்தையும் எனது சமூகம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.


// மெஜாரிட்டி மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறது. இலங்கை என்ன இந்தியாவா.. //

ஸ்ரீகிருஷ்ணா - இந்த மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவேண்டும் என்பதின் விளைவை ஓரளவுக்கு தமிழ்நாட்டுப் பிராம்மணர்கள் அனுபவித்திருக்கிறார்கள். இப்போது இலங்கை அரசை நீங்கள் நியாயப்படுத்துவது போலவே, இதையும் யாராவது நியாயப்படுத்தலாம். அதை நீங்கள் ஏற்பீர்களா(தயவு செய்து இதற்காக நேர்மையான பதிலை சொல்லுங்கள் - ஏனெனில் தமிழ்நாட்டில் பிராம்மணர்களின் நிலைக்கும் இலங்கையில் தமிழர்களின் நிலைக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு). இலங்கையில், சிங்களவர்கள் அரசு ஒத்துழைப்புடன் எத்தனை கலவரங்களை புலிகளுக்கு முன்பாக தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறார்கள், எத்தனை பத்தாண்டுகள் அந்த சமூகம் அமைதியாக போராடியிருக்கிறது என்று பாருங்கள்.

1983 போன்ற ஒரு கலவரத்தை மைனாரிட்டியான பிராம்மணர்கள் மீது ஏனைய தமிழர்கள், அரசு உதவியுடன் சேர்ந்து நடத்தி, பின்பு அதை என்னைப் போன்ற அபிராம்மணர்கள் நியாயப்படுத்தினால் அப்போது அது எவ்வளவு அருவருப்பான ஒன்றாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் இப்போது அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றீர்கள். முத்திரை வேறு - ஆனால் விஷயம் அதே தான். முகவரி வேறு என்பதால் நமது நியாயத்தன்மை விடைபெற்றுக்கொள்வது துரதிர்ஷ்டமான விஷயம்.

பாகிஸ்தானில், பங்களாதேஷில் எல்லாம் இந்த மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நினைக்கிறார்கள். அதையெல்லாம் சரி என்கிறீர்களா? ஒரு நாட்டிற்கு இமிக்ரண்டாக போவதற்கும், தமது பூர்வீக நிலத்தில் காலனி கால சரித்திர தவறுகளால் மைனாரிட்டியாவதற்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு. ஈழத்தமிழர்கள் தமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் எப்படி மைனாரிட்டியாக ஆவார்கள்? பிரித்துக் கொடுக்கும்போது பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையை இந்தியாவோடு சேர்த்துக்கொடுத்திருந்தால் சிங்களவர்கள் மைனாரிட்டி ஆகியிருப்பார்கள். ஒருவேளை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் பாகிஸ்தான் பர்மா எல்லாம் செர்த்து கொடுத்திருந்தால் இந்துக்கள் கூட (அதாவது இந்து என்று நீங்கள் கொடுக்கும் டெஃபனிஷன் படியான இந்துக்கள்) மைனாரிட்டியாக போயிருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நிலையைக் கற்பனை செய்து பார்த்து பின்பு இதற்கான பதிலை கூறுங்கள்.

//இலங்கையில் மக்கள் முள்வேலிக்குள் அவதிப்படுகிறார்கள். சரி. இந்துக்கள் என்று உங்களுக்கு மட்டும்தான் தோன்றுகிறது. சொல்கிறீர்கள். அவர்களே கூட அப்படி நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் இவ்வளவு நாள் வாய் மூடி இருந்து விட்டு இப்போது நான் இந்து என்று அலறுவது நம்பக் கூடியதாக இருக்காது. அதோடு ஏன் பிள்ளையே ஆனாலும் சுவைன் ப்ளூ வந்து விட்டால் ஓரமாக ஒதுக்கி கஞ்சிதான் சாப்பாடு கொடுக்க வேண்டி வரும். இங்கே இலங்கை தமிழர்களுக்குள் நான்கு பிரதம மந்திரிகளையே பலிவாங்கிய, தற்கொலை தீவிரவாத விஷ வைரஸ் கலந்து விட்டிருக்கிறது. அப்போது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மேலும் அப்பாவிகள் சாகமாட்டார்கள் என்று என்ன நிச்சயம். இலங்கை அரசு உறுதியுடன் செயல் படுவதை பாராட்ட வேண்டும். ஏற்கனவே அவர்கள் தவனை முறையில் அடைத்து வைத்துள்ள தமிழர்களை விடுதலை செய்து குடியேற்ற ஆரம்பித்து விட்டார்கள். பத்தாயிரம் பேர்களை விடுதலை செய்து விட்டதாக படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையுமே குடிஎர்ருவார்கள் என்றே நம்புகிறேன்//

ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இல்லாமல், முழுக்க முழுக்க கிறித்துவர்களாகவோ அல்லது பவுத்தர்களாகவோ இருந்திருந்தால் கூட எனது எண்ணம், இந்த விஷயத்தில் இப்படித்தான் இருக்கும். இதைத் தவிர இந்த கருத்து பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்களைப் போன்ற கருத்துடையவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஈழத்தமிழர்கள் இப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதை நினைத்தும், மொழியால் - கலாசாரத்தால் - வரலாற்றால் - நிலத்தால் அண்மையராக இருக்கும் தங்களைப் போன்றவர்களின் ஈரமற்ற கருத்துக்களும், வக்கிர மனோபாவத்தையும் பார்த்தால் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது. இந்த விவாதத்தில் நான் சொல்வதை சொல்லிவிட்டேன் - இன்னும் நிறைய எழுதத்தோன்றினாலும், சுருக்கமாக சொல்ல முயன்றுள்ளேன். உங்களைப் போன்றவர்களை மாற்ற முடியாது என்று தெரியும். மற்ற பொதுஜனங்களுக்காகவே இந்த பதிலை எழுதியிருக்கிறேன். எனவே நீங்கள் இதற்கு பதிலை எப்படி சொன்னாலும், அமைதியே காப்பேன். ஆனால் ஒன்று நீங்கள் எதை எழுதினாலும், பின்பு கொஞ்சம் உங்களை, உங்களது குடும்பத்தை அந்த நிலையில் வைத்து கற்பனை செய்துகொண்டு பின்பு எழுதுங்கள். அல்லது என்றாவது ஒரு நாள் இதை யோசித்துப் பாருங்கள், மனிதராவீர்கள்.

Stumble Upon Toolbar

Sunday, August 30, 2009

ரசித்த கவிதை - ஹைக்கூ மொழிபெயர்ப்புகள்(ஸ்ரீதரன்)


புல்லின் பனித்துளி
காற்றில் மீண்டும்
கரைவதன் இன்பம்
(கோராகு, 1837)

தூரிகையை வீசிவிட்டேன்
இனி நான் நிலவுடன் பேசுவேன்
நேருக்கு நேராய்
(கோஹா, 1897)

என்ன அற்புதம் -
நிலவொளிப் படகில்
பிரார்த்தனை கீதம்
(கொஸான், 1747)

விடைபெறுகிறேன்; விடைபெறுகிறேன்
மலர்தலில்லை, உதிர்தலில்லை
ஆயினும் யாவும் நலமே
(ஹாகுசாய், 1792)

இரவுகளின் கடைசி இரவில்
மலர்வனங்கள் கிசுகிசுக்கும்
‘புத்தனே’, ‘புத்தனே’ என்று.
(ரான்சேகி, 1738)

வசந்த மலர்கள்
வீணர்களைக் கடியும் நான்
விடிந்தும் உறங்குகிறேன்
(ஹாகுதோ, 1727)

குளிர்கால உறைபனி
தெளிந்த நீராய் உருகும்.
தெளிந்திருக்கிறது மனம்
(ஹ்யாகா, 1779)

இந்த வருடம் நான்
தாமரையைக் காணவிழைகிறேன்
அந்தப் பக்கத்திலிருந்து
(ஜாகுரா, 1906)

குறுகும் கோடையிரவு
ஐம்பதாண்டுக் கனா
முடியுமுன் கலைகிறது
(காபூ, 1827)

உறைகுளிர்
ஆழம்காணவியலா
பெருங்கடலோசை
(காசென்ஜோ, 1776)

எனது முதிர் உடல்
இலைநுனிப்
பெரும் பனித்துளி
(கீபா, 1868)


எரிந்தொழிந்தது என்
சேமிப்புக் கிடங்கு
ஏதுமிலை நிலவை மறைக்க
(மசாஹிதே, 1723)

உதிருங்கள் மலர்களே
விட்டுச் செல்லுங்கள்
வாசத்தின் நினைவுகளை
(மின்தெய்சென்கன், 1844)

சாவும் வாழ்வும்
சந்திக்குமிடத்தில்
குயிலின் கீதம்
(நாமாகாச்சி, 1893)

கனவைத் திருப்பித் தா காகமே
எந்நிலவுக்கு என்னை எழுப்பினாயோ
பனிமூடிக் கிடக்கிறது அது
(ஓநிட்சுரா, 1738)

இரவில் என் துயில்
வாழ்வின் கோடை நிழல்களைத்
தழுவிக் கொள்கிறது
(ஓடோ, 1935)

ஃபுஜி மலையை
உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கையில்
சட்டென இறக்கவே விருப்பம்
(ரான்காய், 1845)


தலையணைத் தள்ளிப்போட்டுக்கொள்கிறேன்
முழு நிலவுக்கு
அருகாக
(சாய்பா, 1858)

இவ்வுலகில் பயணித்தேன்
நிலவும் பனியும் மலருமாய்
ஒரு வாழ்வு
(ஷார்யூ, 19-ஆம் நூற்றாண்டு)

விடிவானம்.
நிஜம்தானா இது?
புத்தனே!
(சோனோமே, 1726)

ரத்தவாந்தி
கனவையும் நிஜத்தையும்
தெளிவுறுத்தும்
(சுனாஓ, 1926)

அழைக்கப்படுகையில்
விடைபெற்றுக்கொள்வேன்
நிலவின் கீழே என் வீடு
(தாகூசீ, 1846)

மரணக் கவிதை
வெறும் மாயை
மரணம் மரணமே
(தாகோ, 1795)

கரியால் வரைந்த
கோட்டுப்படமா?
மங்கிய நிழலா?
(தோயோகுனி, 1825)

Stumble Upon Toolbar

Friday, June 5, 2009

மனமெனும் நோய்..(ஜெயமோகன்)

மனமெனும் நோய்..


ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்! என் பள்ளிக்காலங்களில் நான் தமிழில் சிறந்து விளங்கியிருந்தபோதும், பணத்தைத் தேடி அலைந்த இந்த இடைப்பட்டக் காலங்களில் தமிழில் எழுதுவது மிகவும் குறைந்து விட்டது. எனவே இந்த கடிதத்தில் இருக்கும் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் கடந்த இரண்டு வருடங்களாகவே உங்கள் எழுத்துக்களை இந்த வலைமனை மூலம் வாசித்து வந்திருக்கிறேன். முதலில் சற்று சிரமமாக இருந்த போதும், தொடர்ந்து வாசித்ததில் உங்கள் எழுத்தின் பொருளும், நடையும் பிடித்து விட்டது.

நீங்கள் அவ்வபோது எழுதி வரும் மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் மிகவும் பயனளிப்பவையாக உள்ளன. இம்மாதிரியான மாற்று மருத்துவத்தில் எனக்குள்ள அனுபவத்தை சொல்கிறேன்.

எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு உடல் சம்பந்தமான பிரச்சனை வர ஆரம்பித்தது. எனது முதுகுத்தண்டின் கீழ் முனையில், ஆசன வாயிலுக்கு அருகில் சிறு நெருடலை உணர ஆரம்பித்தேன். உட்காரும் போதும், தூக்கத்தில் புரண்டு படுக்கும் போதும் அந்த நெருடலை என்னால் உணர முடிந்தது. வலியில்லை. ஒரு சில வாரங்களுக்கு பின்னர் அந்த நெருடல் அதிகரித்த மாதிரியும் ஒரு சிறு வலி உணர்ந்த மாதிரியும் இருந்தது. ஒருவேளை நான் தொடர்ந்து அதை பற்றியே யோசித்து கொண்டிருப்பதால் தான் அவ்வாறு தோன்றுகிறதோ என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் சில நாட்களில் அந்த நெருடலுடன் கொஞ்சம் வலியும் சேர்ந்து கொண்டு என்னை பீதியடைய வைத்தன. வலி சிறிய அளவில் தான் இருந்த போதும், அது தோன்றும் இடம் மிக முக்கியமானது அல்லவா? இருக்கவே இருக்கிறது சர்வரோக நிவாரணி - இணையம்! கூகுளில் தேட ஆரம்பித்தேன்..

அவ்வாறு செய்ததற்கு என்னை நானே நொந்தும் கொண்டேன். அப்பப்பா எத்தனை விதமான வியாதிகள், பிரச்சனைகள்.. எல்லாமே எனக்கு இருக்கின்ற மாதிரி ஒரு கலக்கம். இந்த வலி பெரிதாக்கி என்னை செயலிழக்கச் செய்ய போகிறது என்று உறுதியாக நம்பினேன். மேலும் கலக்கம், குழப்பம். ஒரு வழியாக முடிவெடுத்து அலோபதி டாக்டரிடம் சென்றேன்..

அவர் என்னை பரிசோதித்தார், x-ray எடுத்துப் பார்த்தார். x-ray யில் எதுவும் வித்தியாசமாக இல்லை என்றும், நான் தொடர்ந்து உட்கார்ந்தே வேலை பார்க்கும் பணியில் இருப்பதால் வரும் பிரச்சனையை தான் என்றும் சொன்னார். மருந்து எழுதிக் குடுத்தார். ஒன்று வலியைக் குறைப்பதற்கு, மற்றொன்று எலும்பை உறுதியாக்குவதற்கு. சில நாட்களில் உறுத்தலும் வலியும் குறைந்தது. ஆனால் வலி மாத்திரையை நிறுத்தியவுடன் திரும்ப வந்தது. இது நிரந்தர தீர்வு அல்ல என்று உணர்ந்தேன். வேறு மருத்துவரிடம் சென்றேன். அவர் மிகப் பரிவுடன் விசாரித்தார். இதற்கு மருந்து அவசியம் இல்லை என்றும், ஆனால் 6 மாதங்களுக்கு நான் உறுதியான தரையில் உட்காரக் கூடாது என்றும், அலுவலகத்திலும், காரிலும் doughnut போன்ற நடுவில் ஓட்டை உள்ள தலையணை மீதே அமர வேண்டும் என்றும் கூறினார். எனக்கு சிறிது நம்பிக்கை வந்தது, இருந்தாலும் என் மனமென்னும் குரங்கு இதற்கு விரைவான தீர்வு இல்லையா என்று தேட ஆரம்பித்தது. அதுவும் இல்லாமல், அந்த doughnut மெத்தை பிறர் முன்னிலையில் உபயோகிக்கவும் கூச்சமாக இருந்தது. எனவே அதை வாங்கவே இல்லை. மீண்டும் கூகுளில் தேடல்…

இரண்டாவதாக நான் பார்த்த டாக்டர் எனக்கு வந்திருப்பது coccyxdinia என்ற உபாதையின் தொடக்கம் என்று சொல்லியிருந்தார். அதை பற்றி கூகுளில் தேடினேன்.. மீண்டும் பயமுறுத்தும் தகவல்கள். இந்த நோயை பற்றி மட்டுமே விவாதிக்கும் forums வாசிக்க ஆரம்பித்தேன். அலோபதி மருத்துவத்தில் யாருமே நிரந்தர தீர்வு அடைந்த மாதிரி தெரியவில்லை. இந்த வலியை சமாளித்து வாழவே பழகிக் கொண்டிருந்தனர். பல முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தவர்கள் உட்பட அனைவருக்கும் இதே நிலை..

எல்லார் மனதிலும் இனம் புரியாத கோபம். ஏன் எனக்கு? ஏன் அந்த இடத்தில்? இது ஒரு மிக தர்மசங்கடமான வலி, உபாதை.. மனிதனை விரைவில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும் என்பது நான் அனுபவித்து அறிந்த உண்மை.. இந்தனைக்கும் எனக்கு இருந்தது ஒன்றும் பொறுக்க முடியாத வலி ஒன்றும் இல்லை.

ஒரு நாள் இந்த வலியில் இருந்து விடுதலை பெற்ற இணைய நண்பர் ஒருவர் மூலம் Dr. Sarno அறிமுகம் ஆனார். இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மருத்துவர். தன்னிடம் வரும் நோயாளிகள் அலோபதி மருதவத்தின் மூலமும் அறுவை சிகிச்சை மூலமும் முற்றிலும் குணம் அடைபவர்கள் மிக சிலரே என்று உணர்ந்து அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு முக்கியமான விடை கண்டறிந்தவர். அதன் மூலம் அநேகரை குணப்படுத்தியும் வருகிறார்.

இவருடைய சிகிச்சை முறையில் மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை எதற்கும் இடம் இல்லை. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் பற்றிய அவரின் புத்தகங்களை படித்தாலே குணம் அடைந்து விடுகின்றனர் பலர். இதில் அநேகர் படுத்த படுக்கையாக இருந்தவர்கள், ஒரே வாரத்தில் ஓடி விளையாடும் அளவிற்கு என்பது தான் ஆச்சர்யம்! இந்த சிகிச்சை முறைக்கு Mindbody Medicine என்று பெயர்.

எனக்கு நம்பிக்கை இல்லை. Amazon.com சென்று இவரின் நூல்களுக்கு வாசகர்கள் எழுதி இருக்கும் testimonials படித்து பார்த்தேன். நூற்றுகணக்கில்! அனைத்தும் இவரின் சிகிச்சையினால் முழு குணம் அடைந்தவர்கள்! ஒரு வேலை இவரின் ஆட்களே இப்படி எழுதி இருப்பார்களோ? ஏதோ மோசடி வேலையோ என்று எண்ணத் தோன்றியது.. ஒருவர் எழுதி இருந்தார், “இதில் யாருக்கும் ஒரு நம்பிக்கை இன்மை தோன்றுவது இயல்புதான். ஆனால் இப்படி யோசித்து பாருங்கள்.. மருந்து இல்லை, மாத்திரை இல்லை, அறுவை சிகிச்சை இல்லை, $10 புத்தகம்.. படித்துதான் பாருங்களேன், இதில் நீங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லையே.. ” என்று.

வாங்கினேன், படித்தேன், குணம் பெற்றேன்! இரண்டே நாட்களில்! என்ன நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.. இந்த புத்தகத்தின் எளிமைப்படுத்தப்பட்ட சாராம்சம் இங்கே தருகிறேன்..
மனிதன் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் பொழுது, அவனது மூளை அவனை திசை திரும்பப் செய்யும் சித்து வேலைதான் இந்த இனம் புரியாத வலி. மூளை இந்த நாடகத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறது? எலும்பு மூட்டுகளின் அருகில் இருக்கும் தசைகளுக்கு செல்லும் பிராணவாயு (oxygen) -வின் அளவைக் குறைப்பதன் மூலம்! இவ்வாறு குறைவதனால் அந்த தசைகள் வலுவிழந்து வலியைத் தோற்றுவிக்கின்றன. நான் உட்பட பலர் இது எலும்பில் உள்ள வலி என்று ஏமாந்து விடுகிறோம். பயந்தும் போகிறோம். ஆனால் இது சாதரணமாக தோன்றும் தசை பிடிப்பு.. டாக்டர்கள் பரிசோதிக்கும் போது எலும்போடு இந்த தசைகள் அழுத்தப்படும் போது, சிலருக்கு உயிரே போகும் வலி ஏற்படுகிறது.. டாக்டரும் இது எலும்பில் உள்ள குறைபாடு என்று அதற்கான அறுவை சிகிச்சை வரை போய்விடுவதால் தான் இந்த நிறை வேறாத பிரச்சனை.

சரி, இதற்க்கு என்ன தீர்வு! மிக சுலபம்… ‘knowledge therapy’ - புரிதல் வைத்தியம் என்று சொல்லலாமா? அதாவது, இந்த வலி நம் மன உளைச்சலளால் தான் ஏற்படுகிறது என்பதை உணர்ந்தாலே அது போய் விடுகிறது.. இது நான் அனுபவித்து அறிந்த உண்மை… இந்த புரிதல் இருந்தாலே மூளையின் இந்த சித்து வேலை எடுபடாது. இன்னும் ஒன்றை நாம் உணர வேண்டும்.. இந்த வலி தீர்வதற்கு, நம் மன உளைச்சல் தீர வேண்டும் என்பது இல்லை! காரணம் அதுவே என்று உணர்ந்தாலே போதும்!

இந்த வலி உடம்பின் எந்த பாகத்திலும் வரலாம்.. எனக்கு வந்தது ஆசன வாயில் அருகில். இப்பொழுது முற்றிலுமாக இல்லை! நான் இந்த வலி ஏற்பட்ட சமயத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தது உண்மை. அதுவே எனக்கு ஏற்பட்ட வலிக்குக் காரணம் என்பதை என்னுடைய மனம் முதலில் நம்பவில்லை. ஆனால் Dr. Sarno -வின் நூல்களில் அவரிடம் குணமான பலரின் கதை என் அனுபவத்தை ஒட்டி இருந்தது என் மனதை மாற்றியது. இந்த சிகிச்சை முறையில் முக்கியமான விஷயங்கள் இரண்டு. ஒன்று, புரிதல். இரண்டு, நம்பிக்கை. இந்த சிகிச்சை முறையின் மீதான நம்பிக்கை. இது மிகவும் அவசியம். இந்த நம்பிக்கை இல்லை என்றால் நம் மூளை நம்மை கவிழ்த்தி விடும். இந்த புரிதலும் நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை பலனளிக்கவில்லை. வேடிக்கையான விந்தைதான். என் அனுபவம் என்னை நம்ப வைத்திருக்கிறது!

பல வருடங்களாக முதுகு வலியினால் படுத்த படுக்கையாக இருந்த பலர் ஒரே வாரத்தில் எழுந்து நடமாடிய அதிசயமும் உண்மை! இதில் சிலருக்கு x-ray களில் எதோ குறைபாடு கண்டுபிடிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதன் பின்னரும் வலியில் அவதிப்பட்டவர்கள்!

நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. அந்த இணைய நண்பர் கூறியது போல, முதுகு வலி, மூட்டு வலி, இன்ன பிற இனம் புரியாத வலிகள் உள்ளவர்கள் இவரின் நூல்களை வாசித்து பார்க்கலாம்.. இழப்பதற்கு என்ன இருக்கிறது? அவரின் நூல்கள் கூகிளில் தேடி, அமேசான் மூலமாகவோ அல்லது ebook வடிவத்திலோ படித்து பார்க்கலாம். இந்த கடிதத்தை உங்கள் வலைமனையில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஒருவரேனும் தங்கள் வலியில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்றால் எனக்கு அதுவே மகிழ்ச்சி!

நவீன மருத்துவத்தின் எல்லைகளை எனக்கு உணர்த்திய அனுபவம் இது.. இன்னும் எழுத நினைக்கிறேன்.. உங்கள் கருத்தை அறிந்த பின்பு எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் ஒன்று உண்மை, நம் உடல் உபாதைகளுக்கான விடைகள் நமக்குள்ளும் நம் செயல்களுக்குள்ளும் இருக்கின்றன என எண்ணத் தோன்றுகிறது.. நீங்கள் கூறியது போல நம் மனத்தை ஆழ்ந்து கவனித்தாலே பல வியாதிகள் குணமடையும் போல!

நன்றி!
சதீஷ்

அன்புள்ள சதீஷ்,

நெருக்கடிகளில் மனம் என்ன செய்யும் என்பதைப்பற்றி நித்ய சைதன்ய யதியின் மாணவரும் ஆயுர்வேத மருத்துவருமான ஒருவர் ஒருமுறை குருகுலத்தில் உரையாற்றினார். பல உதாரனங்கள் அளித்தார். முதல் உதாரணம், நீர். தடைசெய்யப்படும் நீர் அந்த தடையை அழுத்தும். பக்கவாட்டில் இடம் தேடும். கிடைத்த சந்து வழியாக பாய்ந்தோடும். ஓர் உதாரணம் சொன்னார். வணிக நெருக்கடிகளில் சிக்கியவர்கள் பாலியல் மீறல்களை நோக்கிச் செல்கிரார்கள். அந்த திசைமாற்றம் அவர்கலை ஒருவகையில் காக்கிரது

ஒரு நெருக்கடியில் சிக்கியவர்கள் அதர்கினையான இன்னொரு நெருகக்டியை உருவாக்கிக் கொள்கிறார்கள். சட்டச்சிக்கல் ஒன்றில் மாட்டிய ஒருவர் சில குற்ரச்செயல்களில் ஈடுபட்டதை அவர் சொன்னார். இஅந்த பதற்றம் அந்தப்பதற்றத்தை சமன்செய்தது. இந்தப்பதற்றம் இவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகையால் முதல் பதற்றத்தைவிட வசதியானது என்று உணர்ந்தார். இதை அவர் வெப்பநோயுடன் ஒப்பிட்டார். உஷ்ணம் உஷ்ணேன சாந்தி என ஒரு சொல்லாட்சி உன்டு

ஒரு இக்கட்டில் இருந்து தப்பிப்பதற்காக மனம் தன்னை பலவாக பிரித்துக்கொள்கிறது. தன்னைத்தானே திசை திருப்பிக் கொள்கிறது. பெரும்பாலான மனச்சோர்வுகள் ஆழமான குற்றவுணர்ச்சியில் இருந்து பிறப்பவை என்ற் சொன்னார். தன்னுடைய பாவ உனர்வு மனச்சோர்வாக மாறி அந்த மனிதரை வதைக்கிறது. மனச்சோர்வுக்கு அவர் பல காரணங்கள் சொல்வார், உண்மையான காரணத்தை வரது மனமே ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும்.

பெரும்பாலான தலைவலிகள் மனச்சோர்வின் விளைவுகளாக இருக்கும். மனம் எதையோ தன்னிடம் இருந்தே மறைக்க விரும்புகிறது என்று அதற்குப்பொருல். கணிசமான வயிறு உபாதைகள் -பசியின்மை அமிலத்தன்மை- மனம் சார்ந்தவையே. உடல்பயிற்சி இடமாற்றம் பயணம் போன்ரவை பல நோய்களை எலிதாகக் குணப்படுத்திவிடுவதைக் காணலாம்.

உங்கள் கடிதம் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஆனால் நிறைய சிந்திக்க வைத்தது

ஜெ

Stumble Upon Toolbar

Monday, June 1, 2009

ஜெயமோகன்: அஞ்சலி,கமலா சுரையா

//மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார்//

இதை நான் சொன்னதற்கு திண்ணையில் பெரும் எதிர்ப்பு இஸ்லாமிஸ்டுகளிடமிருந்து எழுந்தது. இப்போது ஜெமோ அதை எழுதியுள்ளார். பார்க்கலாம்.

நேகு

-----------


http://jeyamohan.in/?p=2819

அஞ்சலி:கமலா சுரையா
June 1, 2009 – 1:32 pm

கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டியை நான் ஒரே ஒருமுறை நேரில் சந்திருத்திருக்கிறேன். கேரள சாகித்ய அக்காதமி அலுவலகத்துக்கு அவர் வந்திருந்தார். நித்ய சைதன்ய யதியின் மாணவரான ஒருவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ”ஆ, எனக்குத்தெரியும்…நித்யா என்னுடைய காதலன்!” என்றார். எனக்கு கமலா தாஸ் எப்படிப்பட்டவர் என்று தெரியும் என்பதனால் ஆச்சரியம் அடையவில்லை. அப்போது கமலா தாஸ் விசித்திரமான கோலத்தில் இருந்தார். எப்படியும் முந்நூறு பவுன் எடையுள்ள நகைகள் அணிந்திருப்பார். இமைகளில் ஜிகினா. உதட்டுச்சாயம். ரூஜ். பளபளக்கும் ‘ஸீ த்ரூ’ சேலை. காதுகளில் அவர் அணிந்திருந்த தொங்கட்டான் மிகமிக விபரீதமாக இருந்தது. அதை சாண்ட்லியரின் குழந்தை எனலாம்.





என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி. அவர் சொல்லிக்கொண்டிருந்த விஷயம் வேடிக்கையானது. அவருக்கு குருவாயூர் கிருஷ்ணனுடன் காதல். காதல் மட்டுமல்ல காமமும் கூட. கிருஷ்ணனை பார்க்கச் சென்றிருந்தார். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது சண்டை வந்துவிட்டது. ”இனி ஆ கள்ளனோடு மிண்டில்ல…”என்றார் நாணத்துடன். ”பக்ஷே அவன் என்னை தேடி வரும்..அவனு ஞான் இல்லாதே ஜீவிக்கான் கழியில்ல” அருகே நின்ற ஒரு ஆசாமி உண்மையான பக்திப்பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

விசித்திரங்களும் கிறுக்குத்தனங்களும் நிறைந்த வாழ்க்கை கமலா தாசுடையது. கேரள வரலாற்றில் ஆழமான தடம் பதித்த நாலப்பாட்டு நாயர் ‘தறவாட்டி’ல் பிறந்தார். தாத்தா கெ.பி.கேசவமேனன் சுதந்திரப் போராட்ட தியாகி. மாத்ருபூமி நாளிதழை நிறுவியவர். இன்னொரு தாத்தா நாலப்பாட்டு நாராயண மேனன் கேரளத்தின் முக்கியமான கவிஞர். அப்பா வி.எம்.நாயர் மாத்ருப்பூமி நிர்வாக ஆசிரியர். அம்மா நாலப்பாட்டு பாலாமணி அம்மா கேரளத்தின் முக்கியமான பெண் கவிஞர்.

சிறந்த கல்விக்கூடங்களில் கற்ற கமலா தாஸ் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். முதலில் கவிதைகள். அவை கவனிக்கப்படவில்லை. பின்னர் எழுதிய சுயசரிதை ‘My story’ பெரும் புகழ்பெற்றது. அதில் தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை கிளர்ச்சியூட்டும்படி எழுதியிருந்தார். இளவயது ‘தோழனின்’ விந்துவின் வாசனையைப்பற்றிய வருணனைகள் அவரை புகழ்பெறச்செய்தன. பின்னாளில் அந்த நூலில் சொன்னவை எல்லாமே பொய்கள் என்றும், பணம் கிடைப்பதற்காக கணவரின் ஆலோசனைப்படி எழுதியவை என்றும் சொன்னார் கமலா.

மாதவிக்குட்டி என்ற பேரில் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய செயற்கையான ஆங்கில எழுத்துக்களுடன் ஒப்பிடும்போது மலையாளத்தில் அவர் எழுதியவை முக்கியமான படைப்புகள். மலையாளச் சிறுகதையை கவிதைக்கு அருகே கொண்டு வந்தார். நடுக்கேரளத்தின் பேச்சு நடையை அழகாக புனைவாக்கினார். காமத்தை மென்மையாக எழுதுவதில் ஒரு சாதனையாளர் அவர். கேரள நவீன புனைகதை இலக்கியத்தின் முதல் பத்து சாதனையாளர்களில் அவரை நிச்சயமாகச் சேர்க்க முடியும்.

ஆனால் அவர் நாலப்பாட்டு குடும்பம் என்பதனாலேயே, அவரது மகன் எம்.டி.நாலப்பாடு மாத்ருபூமி ஆசிரியராக இருந்தமையாலேயே, அவர் மிகையாகப் புகழப்பட்டார். கொண்டாடப்பட்டார். அவரை பற்றி கட்டுரைகள் எழுதிக்குவிக்கப்பட்டன. அந்த வரிகள் வழியாக நாம் அவரை அணுகினால் ஏமாற்றமே ஏற்படும்.

கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்துகொள்வார்.

கமலாவின் அதிரடிகள் பல. சுயேச்சையாக தேர்தலில் நின்றார். அரசியல் கட்சி தொடங்கினார் — ஆம், தேசியக்கட்சி! ஓவியங்களை வரைந்து கண்காட்சி வைத்து உண்மையான ஓவியர்களை கதறி ஓடச்செய்தார். பயங்கரமாகப் பாட்டு பாடினார்.

அந்த தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.

நிர்மால்யா மொழியாக்கத்தில் கமலாதாஸ் கதைகள் என்னும் ஒரு தொகுப்பு வெளிவந்தது. கவிதா பதிப்பக வெளியீடு. அதற்கு நான் எழுதிய முன்னுரையில் [கமலாவின் காதல்கள்] கமலாதாசின் இந்த கிறுக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அவர் கடுமையாக எதிர்வினையாற்றியதாக என்னிடம் நடுவே உள்ள சில இதழியல் நண்பர்கள் சொன்னார்கள். நான் அவரை கூப்பிடவில்லை. ஆகவே ஆறுமாதம் கழித்து என்னை ·போனில் கூப்பிட்டு வசைபாடினார். கமலாவைப் பொறுத்தவரை அந்த எதிர்வினையேகூட ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்பதனால் நான் எதிர்வினையாற்றவில்லை

********அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே ‘பாதுகாப்பான துணை தேடி’ மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார்.********

கடைசிக்காலத்தில் கமலா தாஸ் மிக மிகச் சோர்வடைந்திருந்தார். இனிமேல் கேரளத்துக்கே வரமாட்டேன் என்று சொல்லி பூனாவுக்குச் சென்றார். அங்கே சென்ற மே 31 மாலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தன் கட்டற்ற இச்சைகளினால் அடித்துச்செல்லபப்ட்ட அலைக்கழிந்த ஓர் ஆத்மா. இதோ அது தன் இயல்பான அமைதியைக் கண்டுகொண்டிருக்கிறது. கவித்துவத்தைத் தொட்ட ஒரு பத்து சிறுகதைகள், பாலியகார நினைவுகள் என்னும் தலைப்பிலான ஆரம்பகால கட்டுரைகள் வழியாக கமலா இலக்கியத்தில் இருந்துகொண்டிருப்பார்.

Stumble Upon Toolbar