.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

வெள்ளி, 4 நவம்பர், 2011

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
மிக நீண்ட தசாப்தங்களாக தொடரும் தமிழர் தாயக விடுதலைக்கான பாதையில் அமைதிவழி போராட்ட காலமுதல் பலமிகுவழிபோராட்ட காலம் பின் பலம்மெளனித்திருக்கும் காலம் அதன் தொடர்ச்சியான காலமென தியாகங்களை வழங்கி எங்கள் ஆழ்மனங்களில் என்றும் குடியிருக்கும் தியாகிகள் முதல் மாவீரச் செல்வங்கள் மற்றும் உடன் பிறப்புக்களின் அர்பணிப்புக்கள்தான் இன்றும் எங்கள் தமிழ்பேசும் இனத்தின் முகவரியாகி விடுதலை வேண்டி நிக்கிறது. அவர்கள் முகங்களை அகம் இருத்தி அவர்கள் கொண்ட அதே இலட்சியத்துக்காக நாம் பயணிக்கும் வரலாற்றின் ஒரு சுழற்சியில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் நடக்கின்ற போது காலம் நமைக்கடப்பதனை உணர்கிறோம்.அவரவர் கடமைகளைச உணர்ந்து ,உளப் பூர்வமாக ,மனத்துாய்மையுடன் சரியாகப் புரிவதன் ஊடாக இலக்கை அடைய தடைகள் உடைத்து உள் நிலைக் களைகள் களைந்து, தாயகத்தில் ஏங்கி நிற்கும் எதிர்கால தளிர்களுக்கும் ,உலகெங்கும் பரந்து வேற்று வயல்களில் நாற்றுக்களாக முளைவிடும் எம் எதிர்கால விளைச்சல்களின் விடியலுக்காக , உலக நடப்புக்களின் வடிவங்களுக்கேற்ப உருவங்கள் கொண்டு கொள்கை தவறாது, தொடர்ந்தும் போராடுவோம்.
இது புதுயுக உலகு வாழ்வியல். வேகமான காலச்சுழற்ச்சி. நவீன தொழில் நுட்ப நுன்னியல் சுழல் வேக வளர்ச்சி. இவ் உலக வாழ்வியலில் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒன்றுக்காக என்னவெல்லாம் இழந்தும் இழக்க விருப்பமின்றியும் அத்தோடு காலத்தின் பறிப்பும் வழங்கலுமாக பிறப்பு - வாழ்வு - வாழ்வுக்கான போராட்டம் - உறவு - இறப்பு என சுழலும் உலகச்சக்கரத்தில் மனிதம் - மனிதன்.
தனியே நான் என்று இல்லாமல் குடும்பம் - சமூகம் - நாடு - சர்வதேசம் என பரந்து விரிந்து செல்கிறது. வேகமான ஓய்வற்ற வாழ்வியலில் சிக்கித்தவிக்கும் மனிதனாகிவிட்டான் இக்கால மனிதன். அதனால் உறவியல் பண்பு நிலைகளும் தம் போக்கிலே மாற்று நிலைகளுக்குள் வழிமாறிப்போகும் நிலைகாணப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சியின் வெற்றியில் உலகு நிகழ்வுகளை இப்போ விரல்களுக்குள் நர்த்தனமாட வைக்கும் வளர்ச்சியின் உச்சப் போக்கில் வளர்கிறது.இந்நிலை எங்கு எதில்தான் போய் முடியுமோ? என ஓர் அச்சமும் ஆட் கொண்ட வண்ணமே உலகு பயணிக்கிறது.
ஒரு இனம் அதன் அடையாளம் எனும் போது தொடர்பியல, பண்பாடு, கலை, கலாச்சாரம், இலக்கியம், மொழி, பரம்பல், பாரம்பரியம், கல்வெட்டு, தொல்பொருள், தொண்மை, தோற்றம், … என ஆழ வேறோடிச்சென்று விளைபொருள் தேடுகிறது.
ஒரு மொழித்தொடர்பு என்பது அத்தியாவசியமாகிறது. அது தனி இன அடையாளத்திற்கு சாட்சியாகிறது. மிக முக்கிய உயிர்த்தன்மை வகிக்கிறது. இன்றைய உலகத தன்மையில் நிலையில் இனஅடையாளம் எனும் கண்ணோட்டமும் அதற்குரிய மிகவேகமான வளர்ச்சிக்கான செயற்பாடும் முக்கியமான மிகமிக ஆழமானதாக அமையவேண்டியது அவசியம் எனக்கொள்ளலாம்.
பிரிவு நிலைப்போக்கு அதிகரித்துத்துச் செல்லும் மனிதப் பண்பியலாகி விரிந்து செல்லுகிறது. காலச்சூழல் அதற்கு காரணங்களாகி கட்டியம் கூறி நிற்கிறது.
சுதந்திரமான கெளரவமான சுய உரிமைகளைக் கொண்ட வாழ்வையே மனிதம் எதிர்பார்த்து வேண்டி நிற்கிறது. இந்த மனிதநேய சிந்தனைகளை யெல்லாம் முன்னர் வேண்டிப் போராடி வெற்றி பெற்று வாழ்கின்ற இனங்கள். அவையே மற்றைய இனங்களை சுரண்டி, அடக்கி, ஆக்கிரமித்து,அழித்துவிட பயங்கரப் பேரலையாய, வல்லாதிக்கமாய், நயவஞ்சக சூழ்ச்சித் திட்டங்களை, குழிகளை ஏற்படுத்தி, பல கூட்டுக்களை உருவாக்கி சிக்கவைத்து, படுத்தாத பாடுகளை அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டு பாரம்பரிய வரலாற்றுத் தொண்மைமிக்க மனிதப்பிறப்பியல் முன்னோடி இனங்களை இல்லாதொழிக்க கங்கனம் கட்டி நிற்கின்றன.

இனம் அதன் அடையாளங்களை கொண்டிருப்பது மிகவும் தேவையானதல்லவா?

அடையாள இழப்பும், அதற்கான பொறிகளுக்குள் வீழ்தலும் ஒரு வித இன அழிவுக்கு துணை போதலே எனலாம். மனித இனமே எத்தனை வகையாகிப் போகிறது. உட்பிரிவுகள் உருவாகி அவை வகை வகை யாகிக்கொண்டே போதலும் ஆபத்தானதுதானே.
எனவே இந்த வல்லாதிக்கங்களை வெற்றி கொண்டு சுதந்திரமான, சுய வாழ்வியலுக்கான சுய போராட்டங்களை வீறுடன் தொடுத்து எந்தவித கருத்தியல் சொல்லாடல்களுக்கும், வல்லாயுத அடக்கு முறைகளுக்கும், சுழற் புயல்களுக்கும், சுனாமிகளுக்கும், பயந்துவிடாமல் மிடுக்குடன் எழுந்து அதன் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும்.
தமிழர் தாயகபூமி ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு என்பதனை தெளிவுபடுத்தி நிலைநாட்டுதல் அவசியமானது. தமிழ் மக்களின் ஒருமித்த அபிலாசையை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து பாடுபடவேண்டும்.
தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் உரிமைகளை உலக அரங்கிற்கு உரிய முறையில் தொடர்ந்தம் எடுத்துக் கூறுவதோடு, கால நீட்சியை தவிர்த்து உடனடிப் பணிகளை புரிவதோடு தொடர்ச்சியான தமிழின விடுதலையை நோக்கிய வேகமான நகர்வை மேற்கொள்வதுடன், தொடர்ந்தும் தமிழர்கள் மீது திட்டமிட்டே மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடைத்தெறிந்து அதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொண்டு தீர்க்கமான முடிவுகளை எட்ட வேண்டும்.
எந்த நிலையிலும் கொண்ட இலட்சியத்திலிருந்து விலகாது, சவால்களையும் , அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தொடர்ந்தும் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும்.
தாயகத்திலே தடம்புரண்டு போக விளையும் இளையதலைமுறக்கான சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, அவயவங்களை இழந்த நிற்கும் எம் உறவுகளின் தன்னம்பிக்கை அவயவங்களாக அவர்களுக்கு உதவுவதோடு, கலாச்சாரச் சீர்கேடுகளுக்குள் சிக்கிவிடாது எம் இனத்தை பாதுகாப்பதற்கான உரிய கவணமெடுத்து செயற்படுவதோடு உரிமைநிறை உறவுகளாக செயற்படுவோம்.
அத்தோடு உலகமெங்கும் பரந்து சிதறுண்டு வாழும் எமது இனத்தினையும் வேற்றுலகில் சிக்கித் தவிக்கும் இளைய தலைமுறைக்கான எதிர்கால விடியலை பெற்றுக்கொடுத்திடவும், இன அடையாளப் பாதுகாப்பிற்கும் தேசிய இன வளரச்சிக்கும் உரமிட்டு சுதந்திர வாழ்வுக்கு பலம் சேர்ப்போம்.
இன்றைய உலக அசுர வேகத்திற்க்கு ஈடுகொடுக்கு மளவில் எமதினத்தின் சகல மட்டத்திலும் பாரிய வளர்ச்சிக்கு திட்டமிட்டு, பல் துறைக்கான வளர்நிலைக்கு களமிட்டு எதிர்காலத்தில் நாமும் சகல நிலைகளிலும் உயர்நிலையில் இருக்க கடுமையாக உழைப்போம்.
ஒரு மையத்துள் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்திட்டவரைபை அவற்றுக்கே உரிய விடயக் கணிப்புக்களுடன் செயற்படுத்த நடவடிக்கை எடுப்போம். தமிழின விடுதலையை இலக்காக தம்சிரமேற் கொண்டு பணியாற்ற திடசங்கற்பத்துடன் பயணிக்கும் அனைவரையும், வாழ்த்தி வரவேற்று பணிதொடர்வோம்.
இதுவே நம் பணி! விடுதலைபெறும்வரை மனதினில் உறதி கொண்டெழுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கருத்துகள் இல்லை: