.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

க,எ,கடதாசிகள்

கசக்கி
எறியப்பட்ட
கடதாசிகள்....

1.
வாலிபமே! வாழ்ந்துவிடு.

ஓ....
வாலிபச் சிட்டுகளுக்காக சில வரிகள்..
வாலிப நதியே!
வழி தவறிப்பேவது ஏனோ?
வாலிபத்தில்
வாழ்ந்திட வேண்டிய நீ
வீழ்ந்திடலாகுமோ?

உன்சிறகுகளை போதைக்குள் சிறையிடாதே.
சிந்தனைக்குள் அதையிடு.
தேசத்துள் முளைவிடு.

மதுவுக்குள் மடிந்து
மாதுவின் மயக்கத்தில் விழுந்து
மரணிக்கவா நீ பிறந்தாய்?
வாலிபமே ! வாழ்ந்து விடு. வீழ்ந்து விடாதே!!!

(தமிழ்தாசனின்..'கசக்கி எறியப்பட்ட கடதாசிகள்...' கவித்தொகுப்பிலிருந்து..09.1996 ஜேர்மன் 'இளைஞன்' சஞ்சிகையில் வெளிவந்த கவிதை.)-
-------------------------------------------------------------------------2.

தமிழ் மூச்செழுந்து எரிகிறது!

வானம் கிழிந்தது!
பூமிப்பந்தின்
தமிழ் மூச்செழுந்து எரிகிறது!

வெட்டிப்பேச்சும்
வெறும்பேச்சும்
வெறுத்துப்போச்சு.

குட்டிபோட்ட
பூனையின் நிலையா
நம் வாழ்வு?
தட்டிக் கேட்கும்
தன்மானக் குணம்
எங்கே போச்சு?

கிட்டிபொல்லும்
கிளித்தட்டும்
கெந்திபிடித்த மணல் விளையாட்டும்
குந்தியிருந்து
வானத்து நிலாவுக்கு
கூடிக்கொடுத்த
முற்றத்து முத்தமும்
தென்னோலைக் கீற்று விரித்து
பாக்குரலில் இடித்துக்கொண்டே
பொக்கைவாய்
பொன்னம்மாப்பாட்டி வாய் சிரித்து பாடிய
காலங்கள் மறந்துபோச்சா?

வெள்ளுடை உடுத்தி
மெல்லநடை நடந்து
பள்ளிபோனதும்
பக்கத்து வாங்கு
பகீரதனை
பார்த்து நெளித்து போனதும்
நினைவிழந்தாச்சா?

தமிழ் வாத்தியார்
பண்டிதர் ஈஸ்வரநாதபிள்ளை
சொல்லிதந்த
இலக்கியப்பாடம்
இலக்கிழந்து போச்சா?

எகிறி ...எகிறி...
எத்தணித்தாலும்
எல்லாம் மாறினாலும்
என்னவோவெல்லாம் மறந்து போனாலும்
தமிழ்க் குணமும்
வடிவமும்மாறிடாது.

பார்
முகத்தை கண்ணாடியில்
வடிவாய்ப்பார்.
அப்போதாவது தெரியாவிட்டாலும்
என்ன செய்ய?

பார்த்தால்.வெட்கித் தலை குனியும்பார்.

தமிழைநேசித்தால் போதாது
தமிழ்வாழ தேசமன்றோ வேண்டும்.
---------------------------------------------------------------


3.
காதலியே!

விம்மி வெடிக்கிறது மனம்.
உனை நினைக்கையிலே!

காதலியே!
கன்னிக் கனவில்
கலந்த காட்சிகள்
பின்னிப் பிணைந்ததுபார்.

எண்ணித்துடிக்குதே!
ஏக்கம்தொடருதே!

கல்லிலும் காதல் தெரியுதடி!
நெல்லு வயல்வெளியின் உயரே
வானப் படுக்கையில்
வண்ண ஓவியம் வரைந்த
அந்த மாலைநெஞ்சுள் விரியுதடி!

உன் கண்ணில்
எனைக்கரைத்தாய்
உயிரில் உருகவைத்தாய்
உனையே பருகவைத்தாய்.

'காதலியே!
உனை நினைப்பதையே நினைக்கிறேன்
உனை மறப்பதையே மறக்கிறேன்.'
----------------------------------------------------------

4.

சுவரோர சிந்தனைகள்.

சினம் வரும்.
சிந்தனைகள் பல விரியும்
விழிகளில் தெரியும்.

மனம் மறுத்த பின்
ஏதோ!உரக்க சொல்ல எண்ணும்.

யாருமில்லா அறையில்
நான் மட்டும்இல்லை!

என் உடல் மட்டும் இருக்க
எண்ணங்கள்
மெதுவாய் திறந்திருக்கும்
சாளரம் வழி போயிருக்குமோ?

இன்றைய
இதன் முன்
சிறுவயது நிகழ்வுகள்
இன்றை
இதன் முன்
நேற்று
அதன் முன்தினம்...

இப்போ என்ன?
இனி என்ன?
இவைதான்
என்னுடல் விட்டு எண்ணும்.

கீறல் போடவும் முடியாத
வாடகைச் சுவரில்
தெரியும்
மனத்திரையில்
சிரிப்பும் அழுகையும்

சேது போல் இருகைகள்.
சங்கிலிகள் இல்லாத சிறை.

இளமையின் முதிர்வுகள்எட்டிப்பார்க்கும் காலமோ?

(சேது போல் விக்ரம் திரைப்படம்.)( பங்குனி 2002 'அருவி' சஞ்சிகையில் வெளிவந்தது.)
--------------------------------------------------------------------------------

5.
விந்தையிலும் விந்தையடி!

எந்தன் நினைவுக் குளியலில்
உந்தன் கனவுகள் கரைவதேனடி!

அன்றுமட்டும்
எனக்கும் மறக்கவில்லை
அடுத்த தெருவும்
ஊரடங்குபோல் மூடிக்கிடந்ததனை!

இன்றும் நினைக்கையில்
வெயில் சுடுகுதடி!

அடுத்து தொடரும்
நினைவுநிழல்
குடையும்பிடிக்குதடி!

வெட்டை வெளியினில்
வானம் தெரியாது
சிட்டைப்போல் பறந்தனையே!

பருவம் ஏங்குதடி!
உருவம் தேடுதடி!

சிந்தையெனை மயக்கி
சந்தித்த தெருவில்
உந்தையழகிலுருக்கி
சிந்திபோனதுன் நினைவுகள்...
 விந்தையிலும் விந்தையடி!
எந்தன் மனக்கொத்தி எங்கு போயினையோ?
-------------------------------------------------------------------------------

6.

காதல்!

விழியை எறிந்து
இதயம் தொலைத்து
உறவை வருத்தும் உறவோ?